சர்க்கரை நோய் பற்றிய தவறான கருத்துக்களும், உண்மைகளும்

நமக்கு சர்க்கரை நோய் இருப்பதைக் கண்டு அறிந்தால், அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நிறைய ஆலோசனைகளைக் கேட்கிறோம். நாம் நிறைய கேள்விப்பட்டாலும், நாம் அதை ஒருபோதும் நம்புவதில்லை. இந்த வலைப்பதிவு சர்க்கரை நோய் முதலாம் வகை ,இரண்டாம் வகை மற்றும் கர்ப்ப கால சர்க்கரைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகளுக்கு எதிரான உண்மைகள் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்குகிறது.

சர்க்கரை நோய் முதலாம் வகை ,இரண்டாம் வகை மற்றும் கர்ப்ப கால சர்க்கரை பற்றிய தவறான கருத்துக்களும், உண்மைகளும்

(Myths Vs facts)

சர்க்கரை நோய் குறித்த பல்வேறு விபரங்களை நாம் கேள்விப்படுகிறோம். அதில் சில உண்மைக்கு மாறாக தவறான கருத்துக்களாகவே உள்ளன. எனவே, உண்மைக்கு மாறான விபரங்களை, உண்மை விபரங்களோடு இங்கு ஒப்பிட்டு விளக்கியுள்ளோம்.

சர்க்கரை நோய் ஒரு தொற்று நோய்.

இது ஒரு பொய்யான நம்பிக்கை. சர்க்கரை நோய் இன்சுலின் என்ற ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் குறைபாட்டால் உண்டாகிறது. இது பரம்பரையாக அல்லது சில கிருமிகளின் (வைரஸ்) பாதிப்பால் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் விருந்துகள் தவிர்க்க வேண்டும்.

இது தவறான கருத்து. ஏனெனில் ஒவ்வொருவரும் தங்களை மகிழ்விக்க விருந்து (பார்ட்டி) போன்றவை உதவுகின்றது. இதனால் மன அழுத்தம் குறைந்து,மன மகிழ்ச்சி ஏற்படுவதால் சர்க்கரை நன்கு கட்டுப்பாட்டிற்கு வருகிறது.

விருந்தில் கலந்து கொள்ளும் சர்க்கரை நோயாளிகள் என்ன வகை உணவு, எந்த அளவு எடுக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக மது (Alcohol) அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இன்சுலின் மருந்து சர்க்கரை நோயைக் குணப்படுத்தும்.

இது தவறு, இன்சுலின் மருந்து உபயோகிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு வருகிறது. முதல் வகை (Type-I IDDM) சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பு இன்மையால் இன்சுலின் போடுவதால் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

இரண்டாம் வகை (Type-II NIDDM) சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரைகள் தேவை. அவர்களுக்கு HbA1C 7 விழுக்காட்டிற்கு மேல் உள்ளபோது சில மாதங்கள் இன்சுலின் போடுவதன் மூலம் சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் மாவுச் சத்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது.

நீரழிவு நோய் வருபவர்களுக்கு இந்த குழப்பம் ஏற்படுகிறது. எனவே, இந்த எண்ணம் தவறு. முதன் முறையாக புதிதாக சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் உணவியல் நிபுணர் மற்றும் மருத்துவரிடம் உணவு முறை குறித்த விளக்கம் பெறவும். முறையான சமச்சீர் உணவின் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி, பின் விளைவுகளைத் தடுக்க இயலும்.

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள இயலாது.

இது சென்ற நூற்றாண்டின் மூடநம்பிக்கை. இப்பொழுது நல்ல பாதுகாப்பான இன்சுலின் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி குழந்தை பெறலாம். கருத்தரிக்கும் முன்பும், கர்ப்ப காலத்திலும் HbA1C அளவு 7 விழுக்காட்டிற்கு கீழ் வைத்திருப்பின் குழந்தைக்கும், தாய்க்கும் எவ்வித அபாயகரமான பாதிப்பும் ஏற்படாது.

இவர்கள் குறித்த காலத்தில் மருத்துவரின் அறிவுரைப்படி இரத்தம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் செய்து சர்க்கரையைக் கட்டுப்படுத்தி, குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இறுதிச் சுருக்கம்:

எனவே, தவறான தகவல்களைக் கடைப்பிடிப்பதை விட உங்கள் மருத்துவரிடம் பேசுவதன் மூலம் சர்க்கரை நோய் பற்றிய துல்லியமான உண்மைகளைக் கண்டறியலாம்.