சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வழிகள்.

இந்தியாவில் சர்க்கரை நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய்க்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் சர்க்கரை நோயைத் தடுக்கும் அல்லது ஒத்திவைக்கும் வழி உங்களுக்குத் தெரிந்தால், அது உங்களுக்கு ஒரு மந்திரக்கோலைப் போல இருக்கும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வழிகள் பற்றி இந்த வலைப்பதிவில் தெளிவாக காணலாம்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வழிகளின் தேவை

வரும் முன் காப்பதே சிறந்தது என்ற பழமொழியின்படி சர்க்கரை நோயை நிர்வகிப்பதை விட அதன் நிகழ்வைத் தடுப்பது அல்லது ஒத்திவைப்பது நல்லது. மேலும், நீங்கள்சர்க்கரை நோயைப் பெறப் போகிறீர்கள் என்பதைக் கண்டறிந்தால், நல்ல வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் அதைத் தள்ளிப்போடலாம் அல்லது தடுக்கலாம்.

சர்க்கரை நோயின் இடைப்பட்ட நிலை (Impaired glucose tolerance or IGT):

சர்க்கரை நோயைக் கண்டுபிடிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே இரத்தத்தில் சர்க்கரை அளவு சரியான அளவைவிட மெதுவாக அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இது தொடர்ந்து உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, சுமாராக 10 வருடங்கள் கழித்து சர்க்கரை நோயாக வெளிப்படுகிறது.

 எனவே அனைவரும் மருத்துவரின் அறிவுரைப்படி சர்க்கரை ஏற்புத்திறன் பரிசோதனை (GTT or Glucose Tolerance Test) செய்து, சர்க்கரை நோய் இடைப்பட்ட நிலை (IGT) கண்டறியலாம்.

குறிப்பாக சர்க்கரை நோயாளி உள்ள குடும்பத்தில் பிறந்த உறுப்பினர்கள், இளம் வயதிலேயே அதிக எடை உடையவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள், மன உளைச்சல் (Depression) மருந்து உட்கொள்பவர்கள் ஆகியோருக்கு இரத்தத்தில் சர்க்கரை ஏற்புத்திறன் பரிசோதனை செய்யும் போது அவர்களுக்கு சர்க்கரை நோய் இடைப்பட்ட நிலை (சாப்பிடும் முன் சர்க்கரை 110-126 மி.கி. சாப்பிட்ட பின் 140-199 மி.கி.) இருப்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பு

இந்தியாவில் மிக அதிகமாக சுமார் 16.4 விழுக்காடு IGT கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் இதைக் கண்டறிந்தால், சர்க்கரை நோய் வருவதை பல வருடங்களுக்குத் தள்ளிப்போடலாம்.

சர்க்கரை நோயாக மாறாதிருக்க

IGT உள்ளவர்கள், உங்கள் சர்க்கரை நிலையைத் தள்ளிப் போட, கீழே உள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

  • IGT உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை (Diabetic checkup) செய்தல் அவசியம்.
  • தினமும் 45 நிமிடங்கள் முறையான உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
  • உணவியல் நிபுணர் (Dietician), மருத்துவர் ஆலோசனையுடன் உணவு முறை மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
  • மருத்துவரின் அறிவுரைப்படி சர்க்கரை நோய் தடுப்பு மாத்திரை தேவையெனில் உட்கொள்ளுதல் வேண்டும்.
இறுதிச் சுருக்கம்:

ஆகையால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வழிகளை பின்பற்றி சர்க்கரை நோய் வராமல் நம்மை பாதுகாத்து கொள்வோம். மேலும்,சர்க்கரை நோயின் சிக்கல்களை அறிந்து, அதை ஆரம்ப நிலையிலேயே தடுப்பது நல்லது.