உங்கள் சர்க்கரை நோயின் நிலை கட்டுப்பாட்டில் இல்லாதபோது, நீங்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சர்க்கரை நோயின் பாதிப்புகள் நிறைய உள்ளது, அதில் கால் பிரச்சனை ஒன்று.
உங்களுக்கு கால் பிரச்சினைகள் இருந்தால், கவலைப்பட வேண்டாம், சரியான கவனிப்பு மற்றும் சிகிச்சையின் மூலம் அதை நீங்கள் சமாளிக்கலாம். அதை எப்படி நிர்வகிப்பது என்பதை இந்த வலைப்பதிவில் பார்க்கலாம்
கால் பாதிப்புகள்
சர்க்கரை நோய் கட்டுப்பாடின்றி (220 மி.கி.க்கு மேல்) இருத்தல், கால் மற்றும் பாதங்களின் முறையற்ற பராமரிப்பு ஆகியவற்றால் கால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக நீண்ட நாட்களாக ஆறாத புண் உள்ளவர்களுக்கு கால் பாதிப்பு அதிகரிக்கிறது.
காலில் ஏற்படும் சிறு பாதிப்புகளுக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாத நிலையில் 25 விழுக்காடு (25%) மக்கள் தங்களுடைய கால்களை இழக்கும் நிலை (Amputation) ஏற்படுகிறது.
கால் பாதிப்பு ஏற்படக் காரணங்கள்
- முறையற்ற கால் மற்றும் பாத பராமரிப்பு
- கட்டுப்பாடற்ற சர்க்கரையால் (220 மி.கி.க்கு மேல்) ஆறாத புண், கிருமி தாக்கம் ஏற்படுதல்.
- நரம்புத்தளர்ச்சி ஏற்படுவதால் வலி, வெப்பம், குளிர்ச்சி தெரியாத நிலை மற்றும் சிறுகாயம், வெடிப்பு, கொப்புளம், சிராய்ப்பு போன்றவற்றை உணர முடியாத நிலை ஏற்படுதல்.
- புகை பிடிப்பதால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, கால் பாதிப்பு அதிகரித்தல்.
கால்களில் ஏற்படும் பொதுவான பாதிப்புகள்
- வறட்சி, வெடித்த தோல் (Fissure skin)
- சேற்றுப் புண்
- காப்பு காய்த்தல் (Corn and callus)
- நீர் கொப்புளம் (Blister)
- உள்நோக்கிய நகம் (Ingrown toenail)
- பாதத்தில் மரு, எரிச்சல்
- வீக்கம் (Swelling)
- சிவப்புத்தன்மை (Redness)
கால் பராமரிப்பும் பாதுகாப்பு வழிமுறைகளும்
- நல்ல கட்டுப்பாடான சர்க்கரை பராமரிப்பும், முறையான கால் பரிசோதனைகளும், கால் மற்றும் பாத பாதுகாப்புக்கு மிக அவசியம்.
- வெறும் காலில் நடப்பதைத் தவிர்த்து, சரியாகப் பொருந்தும் காலணிகளை அணிய வேண்டும். குறிப்பாக, அதிக வெப்பம், பனி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
- தினமும் கால் பாதங்களை வெதுவெதுப்பான தூய நீரால் கழுவி சுத்தம் செய்து, காலில் ஆணி, கொப்புளம் மற்றும் புண் போன்றவை உள்ளதா எனப் பரிசோதனை செய்ய வேண்டும். தேவைப்படுவோர் முகம் பார்க்கும் கண்ணாடி உதவியுடன் பாதங்களைப் பரிசோதிக்கலாம்.
- விரல் நகங்களைச் சரியாக வெட்ட வேண்டும். காலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு வீட்டு சிகிச்சையை மேற்கொள்ளாமல், மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
- தோல் வறட்சிக்கு மருத்துவரின் அறிவுரைப்படி பாதுகாப்பான களிம்பு (Safe cream) பூசுவதுடன், அதிக அளவு குடிநீர் (3-4 லி) அருந்த வேண்டும்.
- மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனைப்படி, கணுக்கால் மற்றும் பாத விரல்களுக்கு தினமும் 5 நிமிடங்கள் பயிற்சி (Exercise) மேற் கொள்ளவும்.
குறிப்பு :
கால் மேல் கால் போட்டு அமர்வதை இயன்ற வரை தவிர்க்கவும். ஏனெனில், கால்கள் சமநிலையில் உள்ளபோது இரத்த ஓட்டம் சீராக அமையும்.
கால் பாதிப்பை தடுக்க செய்யவேண்டிய பரிசோதனைகள்.
- நுண் கம்பி பரிசோதனை (Monofilament test)
- கால் உணர்வு அறியும் பரிசோதனை(Biothesiometry)
- இரத்த ஓட்டம் அறியும் பரிசோதனை (Doppler foot scan)
சிகிச்சைமுறைகள்
- கால் பாதங்களில் புண் ஏற்பட்டால், நடப்பதைத் தவிர்த்து முழு ஓய்வு எடுத்தல் (Strict bed rest).
- கிருமிகள் தாக்கப்பட்டிருந்தால், அதற்கு சரியான நுண்ணுயிர் எதிர்பொருள் மருந்துகளை (Antibiotics) மருத்துவர் உதவியுடன் எடுத்தல்
- தேவையெனில், தோல் ஒட்டு சிகிச்சை (Skin grafting) செய்து தோலை சரி செய்து கொள்ளலாம்.
- காலில் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டால், அடைப்பு இடத்தை பொருத்து, இரத்தக் குழாய் சீரமைப்பு (Angioplasty) அல்லது கால் அகற்றுதல் (Amputation) முடிவு செய்யப்படும்.
முடிவுரை
சர்க்கரை நோயின் பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், தகுந்த சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும், கால் பிரச்சனைகள் நீங்கள் எதிர்கொள்ளும்போது, முந்தைய கட்டத்தில் சிறந்த சிகிச்சைக்காக உங்கள் மருத்துவரை முடிந்தவரை பார்க்கவும்.