சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டிய உணவு

சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டிய உணவு: சர்க்கரை நோயைக் கையாள, உங்கள் முக்கிய கவனம் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்ததில் இருக்க வேண்டும். மேலும், சர்க்கரை நோயை நிர்வகிக்க, ஆரோக்கியமான, சமச்சீர் உணவு அவசியம். இந்த வலைப்பதிவு மூலம் சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டிய உணவு பற்றி தெளிவாக பார்க்கலாம்.

சர்க்கரை நோய் கட்டுப்படுத்த வழிமுறைகள்

 • ஆரோக்கியமான உணவு முறை
 • உடற்பயிற்சி
 • மாத்திரைகள்

சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டிய உணவு

உணவுப் பயிற்சி

சர்க்கரை நோய் ஏற்பட்டால் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியுமேயன்றி, முழுமையாகக் குணப்படுத்த இயலாது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு மருந்துகள் மட்டுமின்றி, உணவு முறையில் சில மாறுதல்களும் மிக அவசியம்.

உணவுப் பிரமிடு

உடல் ஆரோக்கிய உணவுப் பிரமிடு உடல் நலனைப் பராமரிக்க விரும்புவோர் எவ்வுணவை எவ்வளவு உண்ண வேண்டும் என்பதை விளக்கும் இப் பிரமிடு நேரானது.

பிரமிடின் அடித்தளத்தில் உள்ள உணவு வகைகளைச் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மையப் பகுதியில் உள்ளவற்றை கூடுமான வரை மிதமாகவும், உச்சியில் உள்ளவற்றை குறைவாகவும் பயன்படுத்தல் நலம்.

குறிப்பு- பிரமிடு மேலே கொடுக்கப்பட்டுள்ளது
உணவு குறிப்புகள்:
 • சர்க்கரை நோயாளிகள் அவரவர் வயது, உடல் எடை, செய்யும் தொழில் ஆகியவற்றிற்கு ஏற்ப உணவியல் நிபுணர், மருத்துவர் ஆலோசனைப்படி சமச்சீர் உணவு உட்கொள்ள வேண்டும்.
 • சர்க்கரை நோயாளிகள் விரதம் மேற்கொள்ளக் கூடாது; விருந்தையும் தவிர்க்க வேண்டும் (No fasting, no feasting).
 • சர்க்கரை நோயாளிகள் தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு (Fixed time) உணவு உட்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
 • உணவு சாப்பிடும் இடைவெளியானது 3 மணி நேரத்திற்கு மேல் மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது தாழ்நிலை சர்க்கரை (Low sugar) ஏற்படாமல் பாதுகாக்கிறது.
 • இடை உணவாக (Snacks), பொரி, பயறு வகைகள், மோர், சூப், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
 • முழு தானிய உணவுகளில் (ராகி, கம்பு, முழு கோதுமை) நார்ச்சத்து அதிகமிருப்பதால் சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு இவை உதவுகின்றன.
 • சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவ, சர்க்கரை, இனிப்புகள், மைதா உணவுகள், ஜூஸ் வகைகள் போன்றவற்றைத் தவிர்த்தல் நல்லது.
 • *கட்டாய விரதம் மேற்கொள்பவர்கள் பால், பழங்கள், இளநீர் போன்றவற்றை உணவியல் நிபுணர்களின் அறிவுரைப்படி உட்கொள்ளலாம்.
 • கஞ்சி, களி, கூழ் போன்ற உணவு வகைகள் சர்க்கரை அளவை இரத்தத்தில் அதிகரிப்பதால், ரொட்டியாகத் தயாரித்து உண்ணுதல் நலம்.
 • ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா போன்ற பழ வகைகளை உணவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி சேர்க்கவும்.
 • ஒவ்வொரு வேளை உணவிலும் காய்கறி, கீரைகள் சேர்த்தல் சர்க்கரை, கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்கு உதவும்.
 • சப்பாத்திக்கு நார்ச்சத்து அதிகமுள்ள முழுகோதுமை பயன்படுத்துதல் ஆரோக்கியத்திற்கு நல்லது (மாவைச் சலிக்காமல் உபயோகிக்க வேண்டும்).
 • கொழுப்பு நீக்கிய பால், தயிர் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம்.
 • அசைவ உணவுப் பிரியர்கள் கொழுப்பு நீக்கிய மாமிசங்களை (Lean meat) உட்கொள்ளலாம் (எண்ணெயில் பொரிப்பதை தவிர்த்து, குழம்பு வகைகளைத் தயாரித்து உட்கொள்ளலாம்).
 • முட்டைப் பிரியர்கள் புரதச்சத்து அதிகமுள்ள வெள்ளைக் கருவை மட்டும் உட்கொண்டு, கொழுப்புச் சத்து அதிகமுள்ள மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.
 • சமையலில் ரீபைண்டு ஆயில், தேங்காய் எண்ணெய், பாமாயில், நெய், வெண்ணெய் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
 • சமையலுக்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை கலந்தாற்போல் எடுக்கவும்.
 • ஒரு நாளைய உணவில் 2 டீஸ்பூன் எண்ணெய்க்கு அதிகமாகச் சேர்க்கக்கூடாது.
 • ஒரு நாளைய உப்பின் அளவு 5 கிராமுக்குள் இருத்தல் நலம்.
 • தினமும் 3 லிட்டர் குடிநீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க உதவும்.

இறுதிச் சுருக்கம்:

இவ்வாறு சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டிய உணவுகளை பின்பற்றி இந்த நிலையை கட்டுப்படுத்துவோம். செல்வம் போய்விட்டால் சம்பாதித்துவிடலாம். ஆனால், உடல் நலம் போனால் முடியுமா. எனவே, வருமுன் காப்போம்! வந்தபின் கட்டுப்பாட்டுடன் இருப்போம்!