பொதுவாக, சர்க்கரை நோயாளிகளின் மனதில் உணவு மற்றும் மருந்துகள் தொடர்பான பல கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கும். உங்கள் கேள்விகளுக்கான திறவுகோல் உங்களிடம் இருந்தால், அது உங்களுக்கு மகிழ்ச்சியான காரணியாக இருக்கும். சர்க்கரை நோய் பற்றிய கேள்விகளுக்கு இந்த வலைப்பதிவு ஒரு திறவுகோலாக இருக்கும்.
சர்க்கரை நோய் பற்றிய கேள்விகள்:
இன்சுலின் ஊசி அளவை மருத்துவர் அதிகரித்தால், ஆபத்து என அர்த்தம்.
இந்த எண்ணம் தவறு. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக முக்கிய நோக்கமே இரத்தத்தில் சர்க்கரை அளவை ஏறத்தாழ சரியாக வைத்துக் கொள்வதுதான். இது மட்டுமே நீண்டகால சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும். எனவே, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவிற்கு ஏற்ப இன்சுலின் அளவு மருத்துவரால் முடிவு செய்யப்படுகிறது. சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் வந்ததும் இன்சுலின் அளவு குறைக்கப்படுகிறது.
சில வேலைகளை சர்க்கரை நோயாளிகள் செய்ய முடியாது.
இது தவறான கருத்து, சர்க்கரை நோயாளிகள் அனைவரையும் போல் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். கார், லாரி ஓட்டுதல், விமானம் ஓட்டுதல் போன்றவை செய்யக் கூடாது என்பது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நிலை. ஆனால், இப்பொழுது சர்க்கரை கட்டுப்பாட்டுடன் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.
குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால் பெரியவராகும் போது சரியாகிவிடும்.
குழந்தைகளுக்கு வரும் சர்க்கரை நோய் வகை -1 எனப்படும் இன்சுலின் சார்ந்த சக்கரை நோய். இது இன்சுலின் சுரக்கும் அனைத்து செல்களும் செயலிழந்த நிலையில் ஏற்படுகிறது. பெரியவர் ஆனாலும் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் (Beta cells) கணையத்தில் வளர்வதில்லை. எனவே இன்சுலின் எப்பொழுதும் போடுவதால் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமாக வாழவும் முடியும்.
தற்போது கணைய மாற்று அறுவை சிகிச்சை (Pancreas islet cell transplant) மூலம் இன்சுலின் சுரக்கச் செய்யலாம். இது இன்னும் ஆராய்ச்சி நிலையில தான் உள்ளது. சில ஆண்டுகளுக்கு பின்னர் குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாகப் பயன்படலாம்.
சர்க்கரை நோயாளிகள் எவ்வகை பழங்களும் சாப்பிடக் கூடாது.
இது தவறு. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவிற்கு ஏற்ப ஆப்பிள், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு மற்றும் மாதுளை, கருப்பு திராட்சை போன்றவற்றை உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் உட்கொள்ளலாம்.
இன்சுலின் போட ஆரம்பித்தால் நிறுத்தவே முடியாது.
இது மிகத் தவறான செய்தி. இன்சுலின் என்பது சர்க்கரை கட்டுப்பாடற்ற நிலையில் இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. சில மாதங்கள் இன்சுலின் உபயோகித்து சர்க்கரை கட்டுப்படுத்தப்பட்டு பின்பு இன்சுலின் நிறுத்தப்படுகிறது (மருத்துவரின் அறிவுரைப்படி). முதல் வகை சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இன்சுலின் நிறுத்தாமல் எடுக்க வேண்டும்.
இறுதி சுருக்கம்
உங்களுக்கு சர்க்கரை நோய் பற்றிய கேள்விகள் மேலும் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். எங்கள் சிறந்த குழு நிபுணர்களுடன் உங்கள் சர்க்கரை நோயை நிர்வகிப்பதற்கான சிறந்த உதவியை நாங்கள் வழங்குவோம்.